English

நன்கொடை

கோயில் வரலாறு

  • Home
  • கோயில் வரலாறு
shape

கோயில் வரலாறு

பஞ்சமாதேவி என்ற ஊரின் பெயர் ராஜராஜ சோழரின் சகோதரி பஞ்சவன்மாதேவி என்பவரால் வந்ததென நம்பப்படுகிறது. முகலாயர்கள் காஞ்சியை கைப்பற்றும் போது, காஞ்சியில் இருந்த பிராமணர்கள் சிலர் தஞ்சாவூரில் பங்காரு காமாட்சி அம்மன் கோயிலையும், மற்றவர்கள் பஞ்சமாதேவியில் இக்கோயிலையும் நிறுவினர்.

இங்கு காளியம்மன், மாரியம்மன், காமாட்சி அம்மன், பிரஹன்நாநாயகி மற்றும் செல்லாண்டியம்மன் என ஐந்து அம்மன் கோயில்கள் உள்ளதால் "பஞ்சமாதேவி" என்றழைக்கப்படுகிறது.

உலகில் முதன்முதலில் தோன்றியதால் ஆதிபுரம், பெருமாள் பள்ளிகொண்டதால் பாஸ்கரபுரம், பிரம்மனது படைப்பில் முதன்முதலில் கரு உருவானதால் கற்பபுரி, வஞ்சி மரங்கள் நிறைந்து இருந்ததனால் வெஞ்சூலாரண்யம், ஆம் காமதேனு வழிபட்டதால் ஆநிலை, சோழர்களால் வெல்லப்பட்டதால் வீரசோழபுரம், மலை, காடு, ஆறு, தீர்த்தம், நகரம், கோவில் என ஆறு மண்டலங்களை உடையதால் ஷுன்மங்களா சோஸ்த்திரம். சித்தர் கருவூரார் வாழ்ந்த புண்ணிய பூமி என்பதால் கருவூர் என்றும், காலப்போக்கில் கரூர் என்று மரூவி அழைக்கப்படுகிறது. இன்றைய கரூர் அசோக மரங்கள் அடர்ந்து நின்றதால் வஞ்சிமாநகரம் என வரலாறும், கல்வெட்டுகளும், பதிற்றுபத்து பதிகங்களும் பதிவு செய்யும் தமிழகத்தின் மையப்பகுதியாக கரூர் விளங்குகின்றது. மேலும் சேரமன்னர்களின் தலை நகரமாகவும் கரூர் விளங்கியது.

கரூர் மாநகரின் தென் கிழக்கே மஹாகுரு சதாசிவ பிரமேந்திராள் ஜீவசமாதியுள்ள புண்ணிய பூமியான நெரூர் செல்லும் வழியில், 4 -வது கிலோமீட்டர் தொலைவில் பஞ்சமாதேவி என்கிற ஊர் அமைந்துள்ளது. சோழ பேரரசன் இராஜராஜசோழனின் சகோதரி பஞ்சவன்மாதேவி பெயரில் இந்த ஊர் அமைந்துள்ளது என்றும் கூறுவர். இந்த ஊரில் இராஜேந்திரசோழனின் பாசறை இருந்ததாக கூறப்படுவதும் உண்டு.

பொதுவாக ஒரு கிராமத்தின் அக்ரஹாரத்தின் மேற்கு பகுதியில் பெருமாள் கோவிலும், கிழக்கு பகுதியில் சிவன் கோவிலும் அமைந்து இருந்தால் அந்த ஊர் அரசர்களால் உருவாக்கப்பட்ட ஊர் என்று கூறப்படுகிறது. அவ்வாறு இந்த கிராமம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஊரில் 5 ஆலயங்கள் உள்ளது, அதில் 5 அம்மன்கள் வீற்றிருப்பதால் பஞ்சமாதேவி என்றும் கூறுவர். இந்தஊரின் தெற்கு பகுதியில் அமராவதி ஆற்றின் வடகரையில், இயற்கை எழில் சூழ்ந்த வயல் வெளியில் பல நூறு ஆண்டுகள் பழமையான உலகை ஆளும் ஜகத்மாதா கருணை நிறைந்த கண்களை உடைய அன்னை ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த அருள் ஆலயம் எந்த நூற்றாண்டில் கட்டப்பட்டது என்கிற தெளிவான வரலாற்று சான்று கிடைக்கப்படவில்லை. காஞ்சி மாநகரின் மீது அந்நிய படையெடுப்பு நடந்தபொழுது அங்கிருந்த பெரியவர்கள் கால்நடையாக அம்பாளை கடத்தில் கொண்டு வந்ததாகவும், ஒருபிரிவினர் தஞ்சாவூரில் ஸ்வர்ண காமாட்சி ஆலயமாகவும், மற்றொரு பிரிவினர் அமராவதி ஆற்றங்கரையில் இந்த காமாட்சி அம்மன் ஆலயத்தினை உருவாக்கியதாக கூறப்படுகிறது.

இவ்வாலயத்தில் அம்பாள் தவசு கோலத்தில் வீற்று இருக்கிறாள். பரிவார தெய்வங்களாக காத்தவராயன், மாசிப்பெரியசாமி, லடதன்னாசி, மதுரைவீரன் மற்றும் சப்தகன்னிமார்கள் ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளது. இவ்வாலயத்தின் சிறப்பு அம்சம் மற்ற கோவில்களில் இல்லாத விசேஷமாக அம்மன் சன்னதி முன்பாக ஊஞ்சல் உள்ளது. அந்த காலத்தில் கருங்கல்லால் இருந்தது, அது பின்னப்பட்டுவிட்டதால் தற்பொழுது மரத்தினால் ஆன ஊஞ்சல் உள்ளது இதன் சிறப்பு. பௌணர்மி நாளில் இவ்வாலயத்திற்கு வந்து வழிபட்டால் திருமண தடை நீங்குவதோடு குழந்தை பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மற்றோரு சிறப்பு அம்சம் இவ்வாலயத்தில் தண்ணீரால் சூழப்பட்ட நிலையில் நவக்கிரகம் அமைந்துள்ளது. தமிழகத்தில் தேவிப்பட்டினத்திற்கு பிறகு இவ்வாலயத்தில் நவக்கிரகம் தண்ணீர் சூழ்ந்த நிலையில் உள்ளது சிறப்பாகும். இதனால் இங்கு எண்ணற்ற பக்தர்கள் ஆயுசு ஹோமம் செய்கிறார்கள்.

இவ்வாலயத்தில் பல நூறு ஆண்டுகள் பழமையான இலுப்பை மரம் உள்ளது. இந்த மரம் மிகப்பிரமாண்டமாக வளர்ந்துள்ளது. இதன் வயதிற்கு சான்றாக மரத்தில் எண்ணற்ற முடிச்சுகள் உள்ளது. இந்த மரத்தினை காண எண்ணற்ற சித்த மருத்துவர்கள் வருகை புரிகின்றனர்.

இவ்வாலயத்தினை சுற்றி மாமரங்கள் நிறைந்து மாமர தோப்பின் மையத்தில் இவ்வாலயம் இருந்து வந்தது. தற்பொழுது கோவிலின் பின் பகுதி மற்றும் முன்பகுதியில் மாமரம் உள்ளது. இவ்வாலயத்தின் தல விருட்சம் “மாமரம்”. 10 வில்வ மரங்கள் ஓர் இடத்தில இருந்தால் அவ்விடம் காசிக்கு சமம் என்பார்கள். இவ்வாலயத்தில் 10 க்கும் மேற்பட்ட வில்வ மரங்கள் தானாக முளைத்து வளர்ந்து மரமாக உள்ளது. வில்வ மரம் இவ்வாலயத்தில் நிறைந்து உள்ளது.

காஞ்சி மாமுனிவர் மஹா பெரியவர் இவ்வாலயத்திற்கு கால்நடை பயணமாக வந்து தங்கியிருந்து சிறப்பு சேர்த்துள்ளார். சிருங்கேரி சங்கராச்சரியர் அவர்கள், நெரூர் சதாசிவம் பிரமேந்திராள் போன்ற எண்ணற்ற ஞானிகளும் ஆன்றோர்களும் வருகை புரிந்து சிறப்பு சேர்த்துள்ளார்கள். தற்காலத்தில் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சரியர் சுவாமிகள் மற்றும் விஜேந்திர சரஸ்வதி சங்கராச்சரியர் சுவாமிகள் பலமுறை வருகை புரிந்து சிறப்பு சேர்த்துள்ளார்கள்.